இக்கோயிலை 'ஸ்ரீவல்லப க்ஷேத்ரம்' என்று அழைக்கின்றனர். சங்கரமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பதிவிரதை ஏகாதசி விரதம் இருந்து, துவாதசி அன்று ஒரு பிரம்மச்சாரிக்கு உணவு படைத்து வந்தாள். ஒருமுறை தோலகாசுரன் என்ற அரக்கன், அப்பெண்ணின் விரதத்திற்கு இடையூறு செய்தான். பகவான் பிரம்மச்சாரி வேடத்தில் வந்து அரக்கனைக் கொன்று உணவு அருந்த வந்தார். அப்போது பெருமாள் தனது திருவாழ் மார்பை மறைப்பதைக் கண்ட பதிவிரதை, உண்மை உணர்ந்து, தமக்கு ஸேவை சாதிக்குமாறு பகவானை வேண்டினார். அவளது வேண்டுகோளின்படி திருவாழ்மார்புடன் ஸேவை சாதித்தார். அதனால் பகவான் 'திருவாழ்மார்பன்' என்று பெயர் பெற்றார்.
மூலவர் ஸ்ரீவல்லபன், கோலப்பிரான், திருவாழ்மார்பன் என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் செல்வத்திருக்கொழுந்து நாச்சியார், வாத்ஸல்ய தேவி ஆகிய திருநாமங்களுடன் காட்சி அளிக்கின்றார். பகவான் கண்டாகர்ணனுக்கு பிரத்யக்ஷம்.
கண்டாகர்ணன் என்பவன் முதலில் சிவபக்தனாக இருந்து, பிறகு சிவபெருமான் உபதேசித்தபடி பெருமாளின் அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்துக் கொண்டு தவம் செய்தான். அப்போது தன் செவியில் கிருஷ்ண நாமம் தவிர மற்ற எதுவும் விழாதிருக்க, தனது காதில் இரண்டு பொன்மணிகளை அணிந்து அது சப்திக்கும்படி அசைத்துக் கொண்டு தவம் செய்தான். பெருமாள் அவனுக்குக் காட்சி தந்து மோட்சம் அளித்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
இக்கோயிலில் ஸுதர்சன சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளேயும், வெளியேயும் உயரமான துவஜஸ்தம்பம் உள்ளது. இது முழுவதும் பொன் தகடால் வேயப்பட்டுள்ளது.
திருமங்கையாழ்வார் 11 பாசுரங்களும், நம்மாழ்வார் 11 பாசுரங்களுமாக மொத்தம் 22 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|